இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் OTP கனரா வங்கி அதிரடி!

Updated On 16/10/2019

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, தற்போது அதிரடியாக ஒரு புதிய திட்டத்தினை கொண்டு வர உள்ளது. ஆன்லைன் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவைப்பட்டுக் கொண்டிருந்த, ஓடிபி என்ற ஒன் டைம் பாஸ்வேர்டு முறை, இனி ஏடிஎம்களில் 10,000 ரூபாய்க்கும் மேல் பணம் எடுத்தாலும் வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது கனரா வங்கி. அதோடு கனரா வங்கி ஏடிஎம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு காரணியாக இருக்கும் என்றும் இவ்வங்கி கூறியுள்ளது.

தனியார் வங்கிகளை விட, பொதுத்துறை வங்கிகள் நாளுக்கு நாள், தங்களது வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பல சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த வகையில் முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா யோனோ கேஸ் என்ற ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் முறையை கொண்டு வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, டெபிட் கார்டுக்கு பதிலாக யோனோ அப்ளிகேஷன் மற்றும் இணையதளம் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் இந்த வங்கி டிஜிட்டல் பணபரிமாற்றத்தை ஊக்குவிக்க, நெப்ட் உள்ளிட்ட பணப் பரிமாற்றங்களுக்கு, கட்டண சலுகை மற்றும் நேர சலுகையும் கொடுத்தது. இதுதவிர ஏடிஎம் கார்டு உபயோகத்தை குறைக்க யோனோ கேஸ் சேவையையும் அறிவித்தது. நாட்டில் தற்போது 90 கோடி டெபிட் கார்டுகளும், மூன்று கோடி, கிரிடிட் கார்டு’களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்றும். இந்த டெபிட் கார்டுகளை படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளது என்றும். இதற்கு மாற்றாக யோனோ செயலியை உபயோகிக்க வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ கூறி வருகிறது. இந்த செயலின் மூலம் புதிதாக வங்கி கணக்கு தொடங்க முடியும். பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், போன்றவற்றை எளிதாகப் பெற இயலும். அதுமட்டுமல்லாது நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது. எனினும் இது குறித்தான முழுமையான தகவலை அறிய https://www.sbiyono.sbi/wps/portal/tnc என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.