மலைபோல் குவியும் முன்பதிவு: இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்

Updated On

ஹூண்டாய் கார்களுக்கு மீண்டும் புக்கிங் குவிய தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), அனைத்து தொழில்களையும் நசுக்கியுள்ளது. இதில், ஆட்டோமொபைல் துறையும் தப்பவில்லை. சொல்லப்போனால் பலத்த அடி வாங்கிய துறைகளில் ஒன்றாக ஆட்டோமொபைல் உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் உலகம் முழுவதும் வாகன விற்பனை ‘டல்’ அடிக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே வாகன விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக கடுமையாக சரிந்து வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை.

அத்துடன் வாகன ஷோரூம்களும் மூடப்பட்டன. ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த மே 4ம் தேதி முதல், பல்வேறு தளர்வுகளை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் கடந்த மே 4ம் தேதி முதல் மீண்டும் வாகன உற்பத்தி தொடங்கியது.

மேலும் அன்றைய தினம் முதல் ஷோரூம்களும் மீண்டும் திறக்கப்பட்டன. தற்போது முன்னணி நிறுவனங்கள் பலவும் வாகன உற்பத்தியை தொடங்கியுள்ளன. அவற்றின் டீலர்ஷிப்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள மற்ற கார் நிறுவனங்களை போலவே, ஹூண்டாய் நிறுவனமும், பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் தனது டீலர்ஷிப்களை தற்போது திறந்துள்ளது. இதன் மூலமாக ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 9 ஆயிரம் முன்பதிவுகளை ஹூண்டாய் நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் 22 நாட்களில் (மே 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை), 5,600க்கும் மேற்பட்ட புதிய கார்களை ஹூண்டாய் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. அதே சமயம் இந்தியா முழுவதும் 530 நகரங்களில் இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் சர்வீஸ் அவுட்லெட்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை கையாண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனம் பெற்றுள்ள 9,000 முன்பதிவுகளில், கிரெட்டா மற்றும் வெர்னா ஃபேஸ்ஃலிப்ட் ஆகிய 2 மாடல்களுக்கும் அதிக அளவிலான புக்கிங் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியாக எவ்வளவு என்பது தெரியாத நிலையில், இந்த 2 புதிய மாடல்களும்தான், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெறுவதற்கு ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதவி செய்துள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் விற்பனையை தொடங்கியிருக்கும் அதே சமயத்தில் கார் உற்பத்தியையும் மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலை கடந்த மே 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. ஹூண்டாய் நிறுவனத்தை போலவே, நாட்டின் மற்ற நிறுவனங்களும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தங்கள் அன்றாட பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் பிரச்னையால் சரிந்த கார் விற்பனை அதே காரணத்தால் மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையுடன் அவை செயல்பட்டு வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பலர் விரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே கார் விற்பனை மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களிடம் நடத்தப்பட்டு வரும் ஆய்வு முடிவுகளும் இதையேதான் தெரிவிக்கின்றன. இதனால் கார் நிறுவனங்கள் புதிய நம்பிக்கையுடன் மீண்டும் சுறுசுறுப்பாக செயலாற்ற தொடங்கியுள்ளன.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore