1000 கிலோ காய்கறிகளை வீடு வீடாக சென்று இலவசமாக கொடுத்த விவசாயி

Updated On

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதுக்கோட்டையில் விவசாயி மூர்த்தி என்பவர், வீடு வீடாக சென்று காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டிவிட்டது. இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து மக்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் கடைகளும் மதியம் 2 மணி அளவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் காய்கறிகளை வீடு வீடாக சென்று மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இயற்கை விவசாயியான மூர்த்தி என்பவர் தனது வயலில் விளைந்த மற்றும் கடைகளில் வாங்கிய புடலங்காய், பீக்கங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 1000 கிலோ எடையுள்ள காய்கறிகளை புதுக்கோட்டை காந்திநகர் பகுதிக்கு சென்று வீடு, வீடாக இலவசமாக வழங்கினார்.

இதுகுறித்து மூர்த்தி கூறும் போது “ நான் ஒரு விவசாயி என்பதால், பொதுமக்கள் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்க எண்ணினேன். ஆனால் மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆகவேதான் நான் காய்கறிகளை வாங்கி வந்து பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore