தெரு விளக்கு மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி

Updated On

தெரு விளக்கு மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி….. எந்தெந்த ஊரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

எலக்ட்ரிக் வாகனம் வாங்க மக்கள் தயங்குவதற்கு ஒரே காரணம், தொலைதூர பயணத்தின் போது சார்ஜ் தீர்ந்துவிட்டால் எவ்வாறு சார்ஜ் செய்வது என்பதேயாகவும். அதனை ஊக்குவிக்கும் விதமாக மெஜண்டா பவர் நிறுவனம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து புதுமையான சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகம் செய்துள்ளன.

மெஜண்டா பவர் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மெஜண்டா பவர் நிறுவனம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான சார்ஜிங் ஸ்டேஷனை தொடங்கியுள்ளன. இதற்கு சார்ஜ்க்ரிட் ஃப்ளேர் என பெயரிடப்பட்டுள்ளது. இது தெரு விளக்குடன் ஒருங்கிணைந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர் ஆகும். தற்போது மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இந்த புதுமையான சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெரு விளக்கு கம்பத்துடன் ஒருங்கிணைந்த திறன்மிக்க எல்இடி விளக்கை சார்ஜ்க்ரிட் ஃப்ளேர் உள்ளடக்கியுள்ளது.

எலெக்ட்ரிக் சார்ஜருக்கான உபகரணமும் தெரு விளக்கு கம்பத்திலேயே இணைக்கப்பட்டிருக்கும். சார்ஜ்க்ரிட் செயலியை பயன்படுத்தி பயனர்கள் கட்டணம் செலுத்த முடியும். அதே சமயம் சார்ஜர்களை தொலைவில் இருந்து கண்காணிக்க முடியும். எனவே அவற்றை கண்காணிப்பதற்கோ, இயக்குவதற்கோ, பராமரிப்பதற்கோ பாதுகாவலர்கள் தேவையில்லை.

மெஜண்டா பவர் நிறுவனம் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட சார்ஜ்க்ரிட் ஃப்ளேர் சார்ஜர்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக இருக்கும்.

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வரும் எம்ஜி மோட்டார் நிறுவனம், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து, இந்தியா முழுக்க தற்போது சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில், சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரானாவின் அச்சத்தினாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினாலும் மக்கள் எலக்ட்ரிக் வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சார்ஜிங் செய்வதில் உள்ள பிரச்சனையினாலே பலரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இந்நிறுவனம் அனைத்து நகரங்களிலும் இந்த சார்ஜ்க்ரிட் ஃப்ளேர் அமைத்தால் மக்கள் அதிகமாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன்வருவர்.

 திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore