திருக்குறள் - 478     அதிகாரம்: 
| Adhikaram: valiyaridhal

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

குறள் 478 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aakaaru alavitti thaayinung kaetillai" Thirukkural 478 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். ('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் - அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும் ; போகு ஆறு அகலாக்கடை - செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து ; கேடு இல்லை - கெடுதல் இல்லை . இது சிக்கனத்தின் நன்மையை எளிய கணக்கு முறையால் விளக்குவது . அளவு என்பது பின்னுங் கூட்டியுரைக்கப் பட்டது . 'அகலாக்கடை 'என்றதனால் , வரவுஞ்செலவும் ஒத்திருப்பினுங் கேடில்லை யென்பதாம் . ஒரு குளத்திற்குள் நீர்வந்து விழும் வாய்க்காலினும் அதினின்று நீர்வெளியேறும் வாய்க்கால் அகன்றிராவிடின் அக்குளநீர் குன்றாது என்பதே, பிறிதுமொழிதற் குறிப்புக்கொண்ட இக்குறட்பொருள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆக்கம் தரும் வரவு அளவில் குறைந்தாலும் கேடு ஏற்பாடாது செலவு பெரியதாக இல்லாது இருந்தால்.

Thirukkural in English - English Couplet:


Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

ThiruKural Transliteration:


aakaaRu aLavitti thaayinunG kaetillai
poakaaRu akalaak kadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore