திருக்குறள் - 716     அதிகாரம்: 
| Adhikaram: avaiyaridhal

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

குறள் 716 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aatrin nilaidhalarnh thatrae viyanpulam" Thirukkural 716 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்¢.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு -பரந்த நூற்பொருள்களை உள்ளத்திற் கொண்டு அவற்றின் உண்மையை உணரும் உயர்ந்த அறிஞரவையில் வல்லானொருவன் வழுப்படல்; ஆற்றின் நிலைதளர்ந்த அற்றே -வீடு பேற்றின் பொருட்டுத் துறவுநெறிக்கண் நெடிது ஒழுகினவன் அந்நெறியினின்றும் தவறி வீழ்ந்தை யொக்கும். ஆற்றின் நிலைதளர்தலாவது, அருள்மேற்கொண்டு கொலை தவிர்ந்து கடுந்தவஞ்செய்து ஐம்புலனு மடக்கியவன் கூடாவொழுக்கத்துட்படுதல். அத்துணைக் கேடானதே நல்லவையில் வல்லான் வழுப்படல். "ஆனைக்கும் அடிசறுக்கும்." என்பது, நாப்பிசகைக் காக்குமே யன்றி அறிவுப் பிசகைக் காவாது. கூடாவொழுக்கத்தான் பயனிழந்து இகழப்படுவது போன்றே, வழுப்பட்ட வல்லானும் பதவியிழந்து இகழப்படுவான் என்பதாம். ஏகாரம் தேற்றம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றின் நிலையை மாற்றும் விரிந்த பூமி, என்பதை ஏற்று உணர்ந்து அறிவுடையோர் முன்னர் எற்படும் இழக்கை புரிந்துக் கொள்ளவேண்டும்.

Thirukkural in English - English Couplet:


As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

ThiruKural Transliteration:


aatrin nilaidhaLarnh thatrae viyanpulam
EtruNarvaar munnar izhukku.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore