திருக்குறள் - 741     அதிகாரம்: 
| Adhikaram: aran

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

குறள் 741 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aatru pavarkkum aranporul anjiththar" Thirukkural 741 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வலியுடையார்க்கும் அரணுடைமை பொருளாவது; பகைவர்க்கு அஞ்சித் தன்னைக் காப்பார்க்கும் அரணுடைமை பொருளாவதாம்; ஆதலால் அதனைச் செய்யவேண்டும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற் செல்வார்க்கும் அரண் சிறந்தது; அஞ்சித்தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித் தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும் அரண் சிறந்தது; (பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப் பிறனொருவன் வெளவாமல் வைத்துச் செல்ல வேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தார் போன்று ஏமங்காணாது இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் போற்றுபவர்க்கும் அரண் பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான், அரணினது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரண்- இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; ஆற்றுபவர்க்கு பொருள்- மூவகை யாற்றலு முடையராய்ப் பிறர் நாட்டின்மேற் படையெடுத்துச்சென்று போர் செய்வார்க்கும் சிறந்த செல்வம்; அஞ்சித் தற்போற்றுபவர்க்கும் பொருள்-அவ்வாற்றலின்றித் தம் பகைவர்க்கஞ்சித் தற்காப்புச் செய்வார்க்கும் சிறந்த செல்வம். மூவகையாற்றல் அறிவு, ஆண்மை,கருவி என்பன.அவற்றுட்கருவி படை, படைக்கலம், பொருள் என முத்திறப்படுவது. ஆற்றலுள்ளவர் பிறர்மேற் சென்ற விடத்து, அவர் கருவூலத்தையும் மகளிரையும் காத்தற்கு அரண்வேண்டியிருத்தலானும்; ஆற்றலில்லாதவர் வேட்டைநாயால் துரத்தப்பட்ட முயல் குழிக்குட் புகுந்து தப்புவது போல், தம் பகைவர்க்குத் தப்பிப் பதுங்குவதற்கு அரண் இன்றியமையாததாலாலும்; தாக்குவார்க்கும் தற்காப்பார்க்கும் ஒப்ப 'அரண் பொருள்' என்றார். வலியார்க்கும் அரண் வேண்டியிருத்தலை யுணர்த்த அவரை முற்கூறினார். ஆயினும், பத்தினித்தெய்வத்திற்குப் படிமைக்கல் எடுக்கவும் கனக விசயரின் செருக்கடக்கவும், வடநாடு சென்ற சேரன் செங்குட்டுவன் முப்பத்திரு மாதம் நீங்கியிருந்தும், தென்னாட்டிற் குழப்பமில்லா திருந்தமை, அவனது அனைத்திந்தியத் தலைமையையே உணர்த்தும். உம்மையிரண்டுள் முன்னது உயர்வு சிறப்பு; பின்னது இறந்தது தழுவிய எச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வழிநடத்துபவருக்கு கோட்டையே சிறந்த பொருள். அச்சத்தை போற்றுபவருக்கும் அதுவே பொருள்.

Thirukkural in English - English Couplet:


fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.

ThiruKural Transliteration:


aatru pavarkkum araNporuL anjiththaR
poatru pavarkkum poruL.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore