திருக்குறள் - 353     அதிகாரம்: 
| Adhikaram: meyyunardhal

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

குறள் 353 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aiyaththin neengith thelindhaarkku vaiyaththin" Thirukkural 353 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. (ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - பல கவர்பட்ட ஐயம் நீங்கி மெய்யறிவு பெற்றார்க்கு ; வானம் நணியது வையத்தின் உடைத்து - தாம் இருக்கும் நிலவுலகத்தினும் வீட்டுலகம் நெருங்கியதாம். ஐயமாவது, கடவுளும் இருவினைப்பயனும் மறுபிறப்பும் விண்ணுலக வீடுகளும் உண்டோ இல்லையோ என ஒரு வழியுந் துணிபின்றி நிற்றல், எல்லாமதங்களும் தனித்தனி பிறவற்றொடு மாறுபட்டுத்தன்தன் கொள்கையே மெய்யெனக் கூறுதலால், அவற்றுள் எதுமெய் எது பொய் யென்று ஓகப்பயிற்சியில் முதிர்ச்சி பெற்றார் தம் பட்டறிவால் உணர்வராகலின், அவரை 'ஐயத்தினீங்கித் தெளிந்தார்' என்றும், அம்மெய்யறிவு வளரவளர வீடு பேற்றுறுதி மிகுமாதலின் 'வையத்தின் வான நணிய துடைத்து' என்றுங் கூறினார். இதனால், ஐயவுணர்வு பிறப்பிற்குக் காரணமாதலுங் கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஐயங்களினின்று நீங்கி மெய்யுணர்ந்தவர்களுக்கு அடைய வேண்டிய வீட்டுலகம் இவ்வுலகத்தினைவிட அருகில் இருப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சந்தேகம் அற்று தீர்க்கமாக அறிந்தவருக்கு பூமியிலும் வானம் நெருக்கம் கொண்டது.

Thirukkural in English - English Couplet:


When doubts disperse, and mists of error roll
Away, nearer is heav'n than earth to sage's soul.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.

ThiruKural Transliteration:


aiyaththin neengith theLindhaarkku vaiyaththin
vaanam naNiya thudaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore