திருக்குறள் - 555     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

குறள் 555 - திருவள்ளுவர் - ThiruValluvar

"allarpattu aatraadhu azhudhakan neerandrae" Thirukkural 555 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம். இஃது அவ்வரசன் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி. (அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அல்லல் பட்டு ஆற்றது அழுத கண்ணீர் அன்றே - குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ ; செல்வத்தை தேய்க்கும் படை - அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம். கொடுங்கோலரசன் கொடுமையைக் குடிகளின் ஆற்றொணாத் துயரநெஞ்சே போக்கிவிடும் . அதற்கு வேற்றரசன் வினைவேண்டியதில்லை யென்பது கருத்து . செல்வத்தை யழிப்பது துயரநெஞ் சேயாயினும், அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது கண்ணீராதலால் , அழிப்புவினை கண்ணீரின்மே லேற்றப்பட்டது . செல்வத்தை மரமாக உருவகியாமையின் இது ஒருமருங் குருவகம் . ஏகாரம் வினா . எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும் . ஆதலால், கொடுங்கோலரசனை இறைவனே அழித்து விடுவான் என்பது கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


குடிமக்கள் அரசனால் துன்பப்பட்டு அதனைப் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீரல்லவா, அவனுடைய செல்வத்தினைக் குறைக்கும் கருவியாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.

Thirukkural in English - English Couplet:


His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.

ThiruKural Transliteration:


allaRpattu aatraadhu azhudhakaN Neerandrae
selvaththaith thaeykkum padai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore