திருக்குறள் - 1110     அதிகாரம்: 
| Adhikaram: punarchchimakizhdhal

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

குறள் 1110 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aridhoaru ariyaamai kandatraal kaamam" Thirukkural 1110 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும், இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை. காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல். (களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்'என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[உடன்போக்கில் தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. ] சேயிழை மாட்டுச் செறிதோறும் காமம் - இச்செம்மையான அணிகலன் களையுடயாளொடு கூடுந்தோறும் நான் பெறுங் காமவின்பம் ; அறிதோறு அறியாமை கண்ட அற்று - நூல்களாலும் நுண்மதியாலும் பொருள்களை அறியவறிய முன்னையறியாமை விளங்கித் தோன்றினாற்போலத் தோன்றுகின்றது. உடன்போக்காவது , தலைமகன் பெற்றோர் அவளைத்தர இசையாதபோது , தலைமகன் அவளைக் கூட்டிக் கொண்டு தன்னூர்க் கேனும் வேற்றூர்க்கேனுஞ் செல்லுதல், அறிவிற் கெல்லையின்மையின் மேன்மேலறிய வறிய முன்னை யறியாமை மிகுந்து தோன்றுவது போல , இன்பத்திற்கும் எல்லையின்மையின் தன் காதலியொடு மேன் மேற் கூடக்கூட முன்னையின்ப நூகர்ச்சிக்குறைவு விளங்கித்தோன்று கின்றதென்று , அவள் சிறப்புக் கூறியவாறு . களவொழுக்கத்திற் பல்வேறு தடைகளால் பன்னாள் தலைமகளைக் கூடப்பெறாது துன்புற்ற தலைமகன் , இன்று அத்தடைகள் முற்றும் நீங்கியமை தோன்றச் ' செறிதோறும் ' என்றான். ' சேயிழை ' அன்மொழித்தொகை . ' ஆல் அசைநிலை . இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்குமுண்டேனும் , அது அவள் நாணம் பற்றிக் குறிப்பாக நிகழ்வதல்லது கூற்றாக நிகழா தென அறிக.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறியும் தருணமெல்லாம் தன்னிடம் உள்ள அறியாமை கண்டறிவதைப் போல் காமத்துடன் உயந்தவளை அணுகும் தருணமெல்லாம் உணரப்படுகிறது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒன்றை அறியும் போது, முன்னிருந்த அறியாமையைக் கண்டாற் போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளைச் சேருந்தோறும், காம இன்பமும் உண்டாகின்றது!

Thirukkural in English - English Couplet:


The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).

ThiruKural Transliteration:


aRidhoaRu aRiyaamai kaNdatraal kaamam
seRidhoaRum saeyizhai maattu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore