திருக்குறள் - 954     அதிகாரம்: 
| Adhikaram: kutimai

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

குறள் 954 - திருவள்ளுவர் - ThiruValluvar

"atukkiya koati perinum kutippirandhaar" Thirukkural 954 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார். இது சான்றாண்மை விடாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிப்பிறந்தார்- உயர்குடிப் பிறந்தவர் அடுக்கியகோடி பெறினும் - பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; குன்றுவ செய்தல் இலர்- தம் ஒழக்கங்குன்றுவதற் கேதுவான இழிசெயல்களைச் செய்யார். செல்வம் பொதுவாகக் காசளவில் மதிக்கப்படுவதனாலும், நன்கொடையாகவுங் கையூட்டாகவுங் கொடுக்கப்பெறுவது பெரும் பாலுங் காசேயாதலாலும், காசுகளில் உயர்ந்தது பொற்காசாதலாலும், இங்குக் கோடி என்பதற்குக் கோடிப் பொன் என்று உரைக்கப்பட்டது. பொன் என்றது உயர்ந்த பொற்காசை. 'கோடி', 'பொன்' என்பன ஆகுபெயர்கள். 'அடுக்கிய கோடி' என்று பொதுப்படச் சொன்னதனால், தாமரை (கோடா கோடி), சங்கம் (பத்துக் கோடா கோடி) பரதம் (இலக்கங் கோடிக்கோடா கோடி) முதலிய மாபேரெண்களெல்லாம் தழுவப்பெறும் உம்மை உயர்வு சிறப்போடு கூடிய எச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பலகோடி பெற முடியும் என்றாலும் நற்குடி பிறந்தவர் குற்றமானதை செய்ய இயலாதவர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்.

Thirukkural in English - English Couplet:


Millions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.

ThiruKural Transliteration:


atukkiya koati peRinum kutippiRandhaar
kundruva seydhal ilar.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore