திருக்குறள் - 713     அதிகாரம்: 
| Adhikaram: avaiyaridhal

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

குறள் 713 - திருவள்ளுவர் - ThiruValluvar

"avaiyariyaar sollalmaer kolpavar sollin" Thirukkural 713 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை. (அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர்-தாம் பேசும் அவையின் திறத்தை யறியாது. அதன் முன் ஒன்று சொல்லுதலை ஏற்றுக்கொண்டவர்; சொல்லின் வகை அறியார்-சொல்லுதலின் கூறுபாட்டை அறியாதவராவர்; வல்லதும் இல்-அதோடு, அவர் கற்றுத் தேர்ந்த கலையும் அவர் கல்லாததாகக் கருதப்படும். கற்றோரவையில் உயர்ந்த நடையில் உயர்ந்த பொருள் பற்றியும், கல்லாரவையில் எளிய நடையில் எளிய பொருள் பற்றியும், பேசினாலன்றிச் சொற்பொழிவாற் பயனின்மையின், 'சொல்லின் வகையறியார்' என்றும்; அவைக்கு ஏற்காதவாறு பேசுவாரைப் பற்றி "இதையறியாதவர் வேறு எதையும் அறியார்," என்னும் கருத்துண்டாதலின், "வல்லதூஉம் இல்" என்றும் கூறினார். 'சொல்லின் வகை'யாவது, "உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளச்" சொல்லுதல். 'வல்லதூஉம்' இன்னிசை யளபெடை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கூடி இருப்பவர்கள் நோக்கம் அறியமுடியதவர் சொல்ல முற்படுவர் என்றால் அந்த சொல்லில் வகையும், வல்லமையும் இருக்காது.

Thirukkural in English - English Couplet:


Unversed in councils, who essays to speak.
Knows not the way of suasive words,- and all is weak.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

ThiruKural Transliteration:


avaiyaRiyaar sollalmaeR koLpavar sollin
vakaiyaRiyaar valladhooum il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore