திருக்குறள் - 656     அதிகாரம்: 
| Adhikaram: vinaiththooimai

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

குறள் 656 - திருவள்ளுவர் - ThiruValluvar

"eendraal pasikaanpaan aayinunhj seyyarka" Thirukkural 656 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும் சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. ('இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க' என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் - தன்னைப் பெற்ற தாயின் பசியைக்கண்டு வருந்தும் வறியனாயினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க-அத் தாயின் பசியைத் தணித்தற் பொருட்டு அறிவுடையோர் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யா தொழிக. "ஈன்றாளின் என்ன கடவுளும்இல்," என்பது நான்மணிக்கடிகை. (ருச). 'ஈன்றாள் பசிகாண்பா னாயினும்' என்பது, பசித்தவள் ஈன்றாளே யாயினும் என்று பொருள் படுவதால், உம்மை உயர்வு சிறப்பாம். "இறந்த மூப்பினராய இருமுது குரவருங் கற்புடை மனைவியுங் குழவியும் பசியான் வருந்து மெல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக வென்னும் அறநூற் பொது விதி, பொருணூல் வழி யொழுகுதலும் அரசர் தொழிற்குரிய ராதலும் நன்கு மதிக்கற் பாடு முடைய அமைச்சர்க் கெய்தாமை பற்றி இவ்வாறு கூறினார்." என்று பரிமேலழகரே கூறியிருத்தலால், ஆரிய அறத்தினும் தமிழ அறம் நனிதவச் சிறந்த தென்பதை அவர் வாய் ஒப்புக்கொள்ளா விடினும் உள்ளம் ஒப்புக்கொள்கின்ற தென்பதும், "அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்." என்று அவர் தம் உரைமுகத்திற் கூறியிருப்பது இதனால் அடிபடுகின்ற தென்பதும் அறியப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைப் பெற்ற தாயினது வறுமையைக் கண்டு இரக்கப்படுகின்ற போதும், அதனைக் காட்டி அறிவுடையோர் பழிக்கும் தொழில்களை ஒருவன் செய்யாதிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெற்றதாயின் பசியை தணிப்பது என்றாலும், உதாரணமாக வாழ்பவர்கள் பழிக்கும் செயலை செய்யக்கூடாது.

Thirukkural in English - English Couplet:


Though her that bore thee hung'ring thou behold, no deed
Do thou, that men of perfect soul have crime decreed.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).

ThiruKural Transliteration:


eendraaL pasikaaNpaan aayinunhj seyyaRka
saandroar pazhikkum vinai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore