திருக்குறள் - 467     அதிகாரம்: 
| Adhikaram: therindhuseyalvakai

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

குறள் 467 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ennith thunika karumam thunindhapin" Thirukkural 467 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான். (துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது , கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க வினையையும் வெற்றியாக முடிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து தொடங்குக ; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கியபின் எண்ணுவோ மென்று கடத்திவைப்பது குற்றமாம் . துணிதல் தீர்மானித்துத் தொடங்குதல் . அரசர்க்குரிய தொழில்கள் ஆறு . அவையாவன : - "ஓதல் பொருதல் உலகு புரத்தல் ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில்" (பிங் . 5 : 42) "ஓதலே வேட்ட லீத லுலகோம்பல் படைப யிற்றல் மேதகு போர்செய் தீட்டல் வேந்தர்செய் தொழில்க ளாறே". (சூடா. 12 : 52) இவற்றுள் வேட்டல் என்பது வேட்டையாடல் . பிற்காலத்தில் ஆரியர் இதற்கு வேள்வி செய்தல் என்று பொருள் கூறிவிட்டனர் . அரசர் தொழில் ஆறாயிருக்கவும் , "ஐவகை மரபின் அரசர் பக்கமும்" (புறத். 20) என்று தொல்காப்பியங் கூறுவது ஆராயத்தக்கது . அறுதொழில்களுள் எதைத் தொல்காப்பியர் நீக்கினார் என்பது திட்டமாய்த் தெரியவில்லை. ஆயின் , இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் அரசர்க்குச் சிறப்பாகவுரிய போர்த்தொழிலை நீக்கி உரை வரைந்துள்ளனர் . "நுண்ணிய கருமமும் எண்ணித்துணி" என்று ஒளவையார் கூறியதுபோல் , எல்லாவினைகளையும் எண்ணியே செய்யவேண்டுமாயினும் , மிகுதியாக எண்ணுவதை வேண்டுவது போர்வினையே . அதனால் வாழ்வுஞ்சாவும் நேர்தலின் , இயன்றவரை அதனைவிலக்கி இன்றியமையாத விடத்தே அதை மேற்கொள்ளுமாறு நால்வகை ஆம்புடைகள் வகுக்கப் பட்டுள்ளன . வலிய பகைவன் தாக்கவரின் கொடை அல்லது திறையாலும் ; ஒத்த பகைவன் வரின் இன்சொல் , பிரிப்பு , கொடை என்னும் மூன்றனுள் ஒன்றாலும் போரைவிலக்கி , எளிய பகைவனாயின் போரால் ஒறுத்தல் வேண்டுமென்பது , பொதுவான கருத்து . துணைவலி சேர்வதால் எளியவன் வலியவனாவதும் , அது தீர்வதால் வலியவன் எளியனாவதும் , இயல்பு பகைவர் பலராயின் பிரிப்பு ஒன்றே கையாளத்தக்க சிறந்தவழியாம் . வலிய பகைவனையும் ஒத்த பகைவனையும் மகட்கொடையாலும் நட்பாக்கலாம்.இவையெல்லாவற்றையும் போர் தொடங்கு முன்னரே எண்ணவேண்டுமென்பதும் , தொடங்கியபின் எண்ணுவது குதிரைகளவுபோனபின் கொட்டகையைப் பூட்டுவதும் வாசல் நிலையில் முட்டிவிட்டு வணங்கிக் குனிவதும் போன்ற குற்றமாகு மென்றும் , இங்குக் கூறப்பட்டன . 'கருமம்' தென்சொல்லே , இதன் விளக்கத்தைப் பின்னிணைப்பிற் காண்க .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தொழிலினை, முடிக்கும் திறத்தினை நன்கு எண்ணிப் பார்த்துத் தொடங்குதல் வேண்டும். தொழிலினைத் தொடங்கிய பிறகு முடிக்கும் திறத்தினை எண்ணுவோம் என்பது குற்றமேயாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


என்னென்ன நேரிடும் என்பதை எண்ணி ஒரு செயலை துவங்க வேண்டும் துவங்கிய பின்பு எண்ணலாம் என்பது இழக்கு.

Thirukkural in English - English Couplet:


Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we'll think,' disgraced shall be.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.

ThiruKural Transliteration:


eNNith thuNika karumam thuNindhapin
eNNueam enpadhu izhukku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore