திருக்குறள் - 91     அதிகாரம்: 
| Adhikaram: iniyavaikooral

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

குறள் 91 - திருவள்ளுவர் - ThiruValluvar

"insolaal eeram alai ip patiruilava" Thirukkural 91 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.) இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்சொல்-இனிய சொல்லாவன; ஈரம் அளைஇ-அன்பு கலந்து; படிறு இலவாம்-வஞ்சனை யில்லாத; செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்-மெய்ப் பொருளையறிந்த சான்றோர் வாய்ச் சொற்கள். 'ஆல்' அசைநிலை. படிறு-பொய். எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார். 'செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்' என்றது, அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு; 'அளைஇ' சொல்லிசை யளபெடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தினை அறிந்தவர்கள், வஞ்சனையிலாதவைகளாகி அன்போடு கலந்து சொல்லுகின்ற சொற்கள், இன்சொற்கள் எனப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மகிழ்வான வார்த்தையால் ஈரம் பெருகும், பொய்மை இன்றி உண்மையை அறிந்தவர்களின் வாய் சொல்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.

Thirukkural in English - English Couplet:


Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

ThiruKural Transliteration:


insolaal eeram aLai-ip patiRuilavaam
semporuL kaNtaarvaaich chol.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore