திருக்குறள் - 23     அதிகாரம்: 
| Adhikaram: neeththaar perumai

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

குறள் 23 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irumai vakaidherinh theendaram poondaar" Thirukkural 23 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது. இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை - பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று. படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறப்பு, வீடு என்னும் இரண்டின் வகைகளை அறிந்து துறவறத்தினை மேற்கொண்ட முனிவர்களின் பெருமையே உலகத்தில் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இரண்டின் வகை அறிந்து இங்கே இயல்பனார் பெருமையை பேசுவதே உலகம்

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இம்மை மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும்.

Thirukkural in English - English Couplet:


Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue's robe arrayed.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).

ThiruKural Transliteration:


irumai vakaidherinh theeNdaRam pooNdaar
perumai piRangitru ulagu.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore