திருக்குறள் - 1251     அதிகாரம்: 
| Adhikaram: niraiyazhidhal

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

குறள் 1251 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaamak kanichchi utaikkum niraiyennum" Thirukkural 1251 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை. இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, தலைமகள் மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்க மாட்டாது வாய்விடுதல். 'நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை'(கலித். நெய்தல்.16) என்றார் பிறரும். அஃது அழிதற்காரணம் நெஞ்சொடு கிளந்தமையின் , இதுநெஞ்சொடு கிளத்தலின் பின் வைக்கப்பட்டது.] (நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. (கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நாணு நிறையு மழியாமை நீ யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) நாணுத் தாழ் வீழ்த்த நிறையென்னுங் கதவு- நாணாகிய தாழிட்டுப் பூட்டிய நிறையென்னுங் கதவை; காமக் கணிச்சி உடைக்கும் - காமவேட்கையாகிய கோடரி வெட்டிப் பிளக்கும். நாணுள்ள வரையும் நிறை அழியாதாகலின் அதைத் தாழாக்கியும், அகத்துள்ளவற்றைப் பிறர் கவராமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலிமையுள்ள இவ்விரு பண்புகளையும் ஒருங்கே நீக்கலின் காமவேட்கையைக் கோடரியாக்கியும், கூறினாள். இஃது உருவக வணி.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் சார்ந்த கணக்கிடுதல் உடைத்துவிடும் நிறை என்ற நாணத்தால் தாழ் போட்ட கதவும் வீழ்த்தும்படி.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘நாணம்’ என்னும் தாழ்பொருந்திய ‘நிறை’ என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.

Thirukkural in English - English Couplet:


The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

ThiruKural Transliteration:


Kaamak Kanichchi Utaikkum Niraiyennum
Naanuththaazh Veezhththa Kadhavu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore