திருக்குறள் - 386     அதிகாரம்: 
| Adhikaram: iraimaatchi

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

குறள் 386 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaatchik keliyan kadunjollan allanael" Thirukkural 386 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


காட்சிக்கு எளியன் - முறைவேண்டினவர்க்கும் குறைவேண்டினவர்க்கும் காண்பதற் கெளியவனாய்; கடுஞ்சொல்லன் அல்லனேல்-பகைவரல்லாத யாரிடத்தும் இன்சொற் சொல்பவனாயிருப்பின்; மன்னன் நிலம் மீக் கூறும் - அவ்வரசனது நாட்டை ஏனை நாடுகளினுஞ் சிறந்ததாக உலகம் உயர்த்துக் கூறும். முறைவேண்டினவர் வலியவரால் தாக்குண்டும் இழப்புண்டும் துன்புற்றவர். குறைவேண்டினவர் வறுமையால் வருந்தியவர். காட்சிக்கெளிமையாவது அலுவல் நேரத்தில் ஓலக்க மண்டபத்திலும் நெருக்கடி நிலைமையில் அரண்மனையிலும் காணக்கூடியவனாயிருத்தல். கடுஞ் சொல்லாவது சினத்தாலும் பொருளாலும் விளைவாலும் தீதாகிய சொல். நாட்டையுயர்த்துக் கூறுதல் அரசனையுயர்த் தலையுந்தழுவும். உலகம் என்னும் ஏழுவாய் தொக்கு நின்றது. உலகம் செங்கோலரசனது நாட்டை மீக்கூறுவது. "கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே". (சிலப். 13:5-10) என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாண்டியன் நாட்டைச் சிறப்பித்துக் கூறியது போன்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


யாவர்க்கும் காணுவதற்கு எளியவனாகவும், யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் இருப்பானேயானால் அம்மன்னனது நிலத்தினை எல்லா நிலங்களிலும் உயர்ந்ததாக உலகம் கூறும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பார்க்க எளிமையாய் எரிச்சல் ஊட்டும் வார்த்தைகள் தவிர்த்தவராய் இருக்கும் மன்னனின் ஆட்சி எல்லை விரிவடையும்.

Thirukkural in English - English Couplet:


Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.

ThiruKural Transliteration:


kaatchik keLiyan kadunjollan allanael
meekkooRum mannan nilam.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore