திருக்குறள் - 1246     அதிகாரம்: 
| Adhikaram: nenjotukilaththal

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

குறள் 1246 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kalandhunarththum kaadhalark kandaar pulandhunaraai" Thirukkural 1246 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகன் கொடுமை நினைந்து செலவுடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சு- என் உள்ளமே! கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்து உணராய்- யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவியின்பங் காட்டி நீக்க வல்ல காதலரைக் காணும்போது, வெளித் தோற்றத்திற் காகவேனும் சற்றுப் புலந்து பின்பு அது நீங்கமாட்டாய்; பொய்க் காய்வு காய்தி- அது செய்ய மாட்டாத நீ இன்று அவரைக் கொடியவர் எனக் கூறி வெறுப்பது போல நடிக்கின்றாய், இந் நடிப்பை விட்டுவிட்டு அவரிடஞ் செல்லத் துணிவாயாக. கலந்துணர்த்தலென்றது கலவியின்ப ஆசை காட்டி அதனாற் புலவியை நீக்குதலை. பொய்க் காய்வு நிலையில்லாத வெறுப்பு. கண்டால் வெறுக்க முடியாது காணாதவிடத்தில் மட்டும் வெறுப்பதாற் பயனில்லை யென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கலந்து இன்பம் உணர்ந்தும் காதலரைக் கண்டால் கூடி உணராமல் பொய்யாக தாகம் கொண்டு தாகம் அடைகிறாய் என் நெஞ்சே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


என் நெஞ்சமே! ஊடிய போது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டு தான் காய்கின்றாய்!

Thirukkural in English - English Couplet:


My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
If thou thy love behold, embracing, soothing all thy pain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.

ThiruKural Transliteration:


kalandhunarththum kaadhalark kandaar pulandhunaraai
poikkaaivu kaaidhi-en nenju.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore