திருக்குறள் - 1290     அதிகாரம்: 
| Adhikaram: punarchchividhumpal

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

குறள் 1290 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kannin thuniththae kalanginaal pulludhal" Thirukkural 1290 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே. இது தலமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) கண்ணின் துனித்தே-முன்னொருநாள் தழுவல் விதுப்பினாற் சென்ற என்னொடு கண்ணளவாக மட்டும் காதலியூடி; என்னினும் தான் புல்லுதல் விதுப்புற்றுக் கலங்கினாள்-என்னினும தான் தழுவல் விதுப்புற்றதினால் அக் கண்ணளவூடலையும் மறந்து அப்பொழுதே கூடிவிட்டாள் . அதனால் , யான் இத்தன்மையேனாய் ஏங்கிநிற்கவும் விதுப்பின்றி யூடிநிற்கின்ற இவள் அவளல்லள். கண்ணளவாக வூடுதல் சொல் நிகழ்ச்சியின்றிக் கண்சிவத்தல்.அவளாயின் ஊடற்கண் நீடாமை பயன் . ஏகாரம் பிரிநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணில் ஆறுபோல் கலக்கமாகி இருந்தாலும் வெட்டிக் கொள்ளாமல் என்னைவிட விரைந்து பற்றிக்கொண்டாள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.

Thirukkural in English - English Couplet:


Her eye, as I drew nigh one day, with anger shone:
By love o'erpowered, her tenderness surpassed my own.

ThirukKural English Meaning - Couplet -Translation:


She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.

ThiruKural Transliteration:


kannin thuniththae kalanginaal pulludhal
enninum thaanvidhup putru.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore