திருக்குறள் - 575     அதிகாரம்: 
| Adhikaram: kannottam

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

குறள் 575 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kannirku anikalam kannoattam aqdhindrael" Thirukkural 575 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும். இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும். (வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்-ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் அழகு செய்வது கண்ணோட்டமே; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் -அவ்வணிகலமின்றேல் அது அறிவுடையோராற் புண்ணென்றே கருதப்படும். மையூட்டும் பெண்டிர் கண்ணிற்கும் மையூட்டா ஆடவர் கண்ணிற்கும், செல்வம் போன்றே வறியாரும் அணியக்கூடிய சிறந்த அணிகலம் கண்ணோட்டம். அஃதின்றி இவ்வுறுப்பிற்கு வேறு அணிகலமுமில்லை.ஆதலால், அவ்வணிகல மில்லாதார் கண் அழகிழப்பதுடன் பல்வேறு வகையில் நோவுதரும் உறுப்பாயிருப்பது பற்றி, 'புண்ணென்றுணரப் படும்' என்றார். பல்வேறு வகை நோவாவன கண்ணோயும் தூசியுறுத்தலும் தீய ஆசையுண்டாக்குதலுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுடைய கண்ணிற்கு அணியும் ஆபரணம் கண்ணோட்டமேயாகும், அந்த ஆபரணம் இல்லையானால், அஃது அறிவுடையோரால் புண் என்று உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணிற்கு அணியும் சாதனம் பார்த்தறிதல்(பக்குவமடைதல்). அது இல்லை என்றால் புண் என்றே உணரப்படும்.

Thirukkural in English - English Couplet:


Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

ThiruKural Transliteration:


kaNNiRku aNikalam kaNNoattam aqdhindrael
puNNendru uNarap padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore