திருக்குறள் - 686     அதிகாரம்: 
| Adhikaram: thoodhu

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

குறள் 686 - திருவள்ளுவர் - ThiruValluvar

"katrukkan anjaan selachchollik kaalaththaal" Thirukkural 686 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான். (அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்று-அறநூல்களையும் அரசியல் நூல்களையுங் கற்று; கண் அஞ்சான்-பகையரசரின் சினப்பார்வைக்கு அஞ்சாது; செலச்சொல்லி-அவர் மனத்திற் பதியுமாறு செய்திகளைச் சொல்லி; காலத்தால் தக்கது அறிவது தூது ஆம்- காலத்திற் கேற்பத் தகுந்த வழிகளைக் கையாள் பவனே நல்ல தூதனாவன். நூற்கல்வி பயன்படாவிடத்துத் தன் மதிநுட்பத்தாலும் உலகியலறிவாலும் சமையத்திற் கேற்றவாறு தக்க வழிகளைக் கையாண்டு, வினைமுடிக்க வேண்டியிருத்தலின், 'தக்கதறிவதாந் தூது' என்றார். 'ஆம்' இங்கும் பிரித்துக் கூட்டப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நீதி நூல்களைக் கற்று, தான் சென்ற காரியத்தை வேற்றரசன் மனங்கொள்ளச் சொல்லி அவர் கோபமாகப் பார்த்தால் அதற்குப் பயப்பட்டு விடாமல் காலத்தோடு பொருந்தச் செயல் முடிக்கவல்ல அறிவுடையவனே தூதனாவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்று அறிந்து காண்பதற்கு அஞ்சாமல் சொல்லவேண்டியதை சொல்லி தகுந்த நேரத்தில் சரியானதை அறிவதே தூது.

Thirukkural in English - English Couplet:


An envoy meet is he, well-learned, of fearless eye
Who speaks right home, prepared for each emergency.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.

ThiruKural Transliteration:


katrukkaN anjaan selachchollik kaalaththaal
thakkadhu aRivadhaam thoodhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore