திருக்குறள் - 554     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

குறள் 554 - திருவள்ளுவர் - ThiruValluvar

"koozhung kutiyum orungizhakkum koalkoatich" Thirukkural 554 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன். இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன் ; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான். வறட்சிக்காலத்து மக்கள் வானை ஆவலாக எதிர்நோக்குவது போல், கொடுங்கோலரசன் குடிகளும் செங்கோலரசனொருவன் வரவை எதிர்பார்ப்பராதலின், அத்தகைய அரசன் அக்கொடுங்கோலனை எளிதில் வென்று அவன் நாட்டைக் கைப்பற்றுவன் என்பதாம் . கூழ் என்றது தன் முன்னோருந்தானும் தேடிய பொருளை. குடியை இழப்பதனால் , அவரிடத்தினின்று இனிப் பெறக்கூடிய பொருளைமட்டு மன்றி அவரையாளும் ஆட்சியையே இழந்துவிடு பவனாவன்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பின்னர் விளைவதனையறியாமல் முறைதப்பச் செய்யும் அரசன், அச்செயலால் முன்பு ஈட்டிய பொருளையும் பின்பு ஈட்டுவதற்கு ஏதுவாகிய குடிமக்களையும் இழப்பான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிமக்களையும் சேர்ந்து இழக்கும் ஆணைகளை சிறப்புறச் செய்யாத அரசு.

Thirukkural in English - English Couplet:


Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.

ThiruKural Transliteration:


koozhunG kutiyum orungizhakkum koalkoatich
soozhaadhu seyyum arasu.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore