திருக்குறள் - 1235     அதிகாரம்: 
| Adhikaram: uruppunalanazhidhal

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

குறள் 1235 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kotiyaar kodumai uraikkum thotiyodu" Thirukkural 1235 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும். இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியோடு தொல் கவின் வாடியதோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை? ('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தொடியொடு தொல் கவின் வாடிய தோள்- வளையல்களுங் கழன்று பழைய இயற்கை யழகையுமிழந்த இத்தோள்கள்; கொடியார் கொடுமை உரைக்கும்- கட்டியணைத்த கை சற்று நெகிழினும் ஆற்றாதவள் இத்துணைக் கால நீட்டியது என்னவாறென்று எண்ணாத, கொடியவரின் கொடுமையைத் தாமே சொல்கின்றன. அவரொடு கலந்த தோள்களை சொல்லுமாயின், கலவாத அயலார் சொல்வதைச் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம். உரைத்தல் உரைப்பது போலத் தெரிவித்தல். 'ஒடு' வேறுவினைக் கண் வந்த உடனிகழ்ச்சி.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை பிரிந்த கொடியவரின் கொடுமையை எடுத்துரைக்கும் வளையலுடன் பழைய நினைப்பில் வாடிய தோள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே!

Thirukkural in English - English Couplet:


These wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

ThiruKural Transliteration:


kotiyaar kodumai uraikkum thotiyodu
tholkavin vaadiya thoal.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore