திருக்குறள் - 901     அதிகாரம்: 
| Adhikaram: penvazhichcheral

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

குறள் 901 - திருவள்ளுவர் - ThiruValluvar

"manaivizhaivaar maanpayan eydhaar vinaivizhaiyaar" Thirukkural 901 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை. இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனை விழைவார் மாண்பயன் எய்தார்- இன்பம் பற்றி மனைவியை அளவறிந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது-இனி இன்பத்திற்கும் அறத்திற்குமேதுவான பொருளீட்டுதலை விரும்பி மேற்கொள்வார்,அதற்குத் தடையென்று கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே. 'மனை' ஆகுபெயர்.' விழைதல்' ஆகுபெயர் போன்ற ஆகுவினை.'பயன்' என்றது அறப்பயனை இம்மைக்கேயுரிய பெண்ணின்பத்திலும் மும்மைக்கு முரிய அறப்பயன் சிறந்ததாதலின்,அதனை 'மாண்பயன்' என்றார். வினை யென்பது பாலாற் பொருளீட்டும் வினையைக் குறித்தது.முப்பொருள்களுள் ஏனையிரண்டும் பெறுதற்குக் கருவியாயிருக்கும் பொருட் பொருளை யீட்டுதற்குத் தடையாயிருத்தலின், மனைவி விருப்பப்படியொழுகுதல் கூடாதென்பதாம். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் இல்லச் சிறப்பை மட்டும் கவனிப்பவர் நற்பயன் அடைய முடியாது. செயல்கள் அற்று சும்மா இருக்க நினைப்பவருக்கு வேண்டான பொருள் அது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்; பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுங்கும் பொருளும் அதுவே.

Thirukkural in English - English Couplet:


Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.

ThiruKural Transliteration:


manaivizhaivaar maaNpayan eydhaar vinaivizhaiyaar
vaeNtaap poruLum adhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore