திருக்குறள் - 278     அதிகாரம்: 
| Adhikaram: kootaavozhukkam

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

குறள் 278 - திருவள்ளுவர் - ThiruValluvar

"manaththadhu maasaaka maandaar neeraadi" Thirukkural 278 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர். இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தது மாசு ஆக - தம் மனத்தின்கண் குற்றமிருக்கவும் ; மாண்டார் நீராடி - தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி ; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - அதன்கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப்பலர். 'மாசு' காம வெகுளி மயக்கங்கள். நீராடியதால் உடம்பழுக்கேயன்றி உள்ளத்தழுக்கு நீங்கிற்றிலர் என்பதை யுணர்த்த 'மனத்தது மாசாக' என்றார். மாண்டார் நீராடி' என்பதற்கு மாட்சிமைப் பட்டாரது நீர்மையை யுடையராய் என்று மணக்குடவர் உரைத்ததும் ஓரளவு பொருத்த முடையதே. 'நீராடி' இரட்டுறல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்காகிய குற்றம் தனது மனத்தில் இருக்க மாட்சியமையுடையவராக நீரில் மூழ்கிக் காட்டித் தாம் அந்தத் தோற்றத்தில் மறைந்து வாழும் மாந்தர் உலகில் பலராவர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தால் அழுக்கை நீக்காமல் இறந்தார்கள் குளிப்பதும் வேதங்கள் ஓதுவதும் செய்த பல மாந்தர்கள்.

Thirukkural in English - English Couplet:


Many wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).

ThiruKural Transliteration:


manaththadhu maasaaka maaNdaar neeraadi
maRaindhozhuku maandhar palar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore