திருக்குறள் - 34     அதிகாரம்: 
| Adhikaram: aran valiyuruththal

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

குறள் 34 - திருவள்ளுவர் - ThiruValluvar

"manaththukkan maasilan aadhal anaiththaran" Thirukkural 34 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் - ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர - மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன. மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்குமாதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாததாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயுமிருத்தலின், இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக் கோலத்தை வீண் ஆரவாரமென்றார். 'ஆதல்' வியங்கோளுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் குற்றம் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆறாம் என்பது அதுவேயாகும். ஆறாம் அவ்வளவே தான்; அதுவல்லாமல் செய்யப்படுவன யாவும் ஆரவாரம் என்னும் தன்மையுடையனவாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனதளவிலேயே மாசு இல்லாமல் இருத்தலே அனைத்திற்கும் அறம் மற்றவை நீர்த்துவேடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை.

Thirukkural in English - English Couplet:


Spotless be thou in mind! This only merits virtue's name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Spotless be thou in mind! This only merits virtue's name;
All else, mere pomp of idle sound, no real worth can claim.

ThiruKural Transliteration:


manaththukkaN maasilan aadhal anaiththaRan
aakula neera piRa.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore