திருக்குறள் - 1273     அதிகாரம்: 
| Adhikaram: kuripparivuruththal

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

குறள் 1273 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maniyil thikazhdharu noolpoal madandhai" Thirukkural 1273 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. (அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) மணியில் திகழ்தரும்நூல்போல்-கோக்கப் பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்து விளங்கித் தோன்றும் நூல்போல ; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இப்பெண்ணின் அழககத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்ற தொரு குறிப்பு முண்டு . அணி கலவியாலான அழகு . அதனகத்துக் கிடத்தலாவது அதனுடன் தோன்றுதல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கோர்க்கப்பட்ட மணி நேர்த்தியாக இருக்கச் செய்யும் நூல் போல் இளம் பெண் அணிந்துள்ளவைகளுக்கு ஆதாரமாக ஒன்று உண்டு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப் போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது.

Thirukkural in English - English Couplet:


As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

ThiruKural Transliteration:


maniyil thikazhdharu noolpoal madandhai
aniyil thikazhvadhondru undu.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore