திருக்குறள் - 766     அதிகாரம்: 
| Adhikaram: pataimaatchi

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

குறள் 766 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maramaanam maanda vazhichchelavu thaetram" Thirukkural 766 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தௌ¤வுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம். நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது. (இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-தறுகண்மை, தன்மானம், பண்டை வயவர் (வீரர்) ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல், அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே; படைக்கு ஏமம்-படைக்கு அரணான பண்புகளாம். தறுகண்மையாவது சாவிற்கும் கொடிய நோவிற்கும் சிறிதும் அஞ்சாமை. மறம் முதலிய நான்கினாலும், முறையே பகைவரைத் தப்பாது வெல்லுதலும். தமக்கும் தம் அரசனுக்குந் தாழ்வு வராமற் காத்தலும், தோற்றோடுவார் மீது படைக்கலந் தொடுதலும் பெண்டிர் கற்பழித்தலும் அரசனது ஏவலின்றிக் கொள்ளையடித்தலும் செய்யாமையும், அறை போகாமையும் பெறப்பட்டன. அரண்போற் பாதுகாப்புச் செய்யும் பண்புகளை அரணென்றார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வீரம், மானம், இறுதி வரை தேவையானவைகள், தெளிவான முடிவு என நான்கும் அவசியமானது படைக்கு.

Thirukkural in English - English Couplet:


Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army

ThiruKural Transliteration:


maRamaanam maaNda vazhichchelavu thaetram
enanhaankae Emam padaikku.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore