திருக்குறள் - 204     அதிகாரம்: 
| Adhikaram: theevinaiyachcham

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

குறள் 204 - திருவள்ளுவர் - ThiruValluvar

"marandhum piran kaetu soozharka soozhin" Thirukkural 204 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும். தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் மறந்தேனும் பிறனுக்குத் தீமைதரும் செயல்களைச் செய்யாதிருப்பானாக; அப்படி நினைப்பானாகில் அவனுக்குத் தீங்கினை அறம் நினைக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைவு அற்ற நிலையிலும் பிறருக்கு கெடுதல் ஏற்படுத்தாதே. ஏற்படுத்தினால் அறம் ஏற்படுத்தும் எற்படுத்தியவனுக்கு கெடுதலை.

Thirukkural in English - English Couplet:


Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

ThiruKural Transliteration:


maRandhum piran-kaetu soozhaRka soozhin
aranjoozham soozhndhavan kaedu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore