திருக்குறள் - 559     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

குறள் 559 - திருவள்ளுவர் - ThiruValluvar

"muraikoati mannavan seyyin uraikoati" Thirukkural 559 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன்னவன் முறைகோடிச் செய்யின் - அரசன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் ; உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம்பொழிதலைச் செய்யாது. உறைகோடுதலாவது மழை இயற்கையாகப் பெய்யவேண்டிய காலத்துப் பெய்யாமை . "வானம் பெயல்" என்பது 'வானம் பெய்கிறது' வையகம் (பூமி) விளைகிறது , என்னும் வழக்கைத் தழுவியது. உறைத்துப் பெய்யும் மழை உறை. "இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு" (குறள். 545) என்றதனால், இயல்புளிக் கோலோச்சா மன்னவ னாட்டிற் பெயலும் விளையுளா மில். என்பது தானே வெளியாம். "கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னு யிரில்லை" மணிமேகலை (7 : 8 - 10)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்வானானால் அவன் நாட்டில் பருவ மழை இல்லாமற்போகும்படி மேகம் மழை பொழிதலைச் செய்யாது..

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆணைகள் கோடி ஆட்சியாளர் செய்வது, வானம் பெய்தும் கோடி நீர்தங்கும் இடத்தில் நீர் தங்காமல் போவதைப் போன்றதே. நீர் நிலைகள் மழையை தக்கவைத்துக் கொள்ளாததைப் போலவே ஆணைகள் அதிகம் செய்யும் அரசால் நன்மைகள் இருக்காது.

Thirukkural in English - English Couplet:


Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

ThiruKural Transliteration:


muRaikoati mannavan seyyin uRaikoati
ollaadhu vaanam peyal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore