திருக்குறள் - 520     அதிகாரம்: 
| Adhikaram: therindhuvinaiyaatal

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

குறள் 520 - திருவள்ளுவர் - ThiruValluvar

"naatoarum naatuka mannan vinaiseyvaan" Thirukkural 520 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க. (அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது - அரசியல் வினைசெய்வான் நெறிதவறாவிடின் நாடு கெடாது ; மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் , அரசன் நாள்தோறும் அவனை ஆராய்க. ஆராய்க என்று பொதுப்படச் சொல்லினும் , திறமையும் அண்மையும் ஒருங்கே யுடையாரை மறைவாகவும் , அவையில்லாதாரை வெளிப்படையாகவும் , ஆராய்தல் வேண்டுமென்பது அறியப்படும் . அரசன் எப்போதும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமுமாகிய வினைசெய்வாரைக்கொண்டே ஆட்சி நடாத்துதலால் , 'வினைசெய்வான் கோடாமை கோடாதுலகு' என்றார் . மன்னன் இங்குக் குறுநில மன்னன் என்னும் சிறப்புப் பொருள் குறியாது , அரசன் என்னும் பொதுப்பொருள் குறித்தது. வினைசெய்வான் வகுப்பொருமை. 'உலகு' உலகின் பகுதியாகிய நாட்டைக் குறித்தலால் முதலாகுபெயர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயல்படுவர் வருத்தம் அடையாதபடி இருக்க எப்பொழுதும் விரும்ப வேண்டும் ஆட்சியாளர்கள் அதனால் உலகமே வளமாய் மாறும்.

Thirukkural in English - English Couplet:


Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

ThiruKural Transliteration:


naatoaRum naatuka mannan vinaiseyvaan
koataamai koataa thulagu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore