திருக்குறள் - 679     அதிகாரம்: 
| Adhikaram: vinaiseyalvakai

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

குறள் 679 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nattaarkku nalla seyalin viraindhadhae" Thirukkural 679 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தஞ் சுற்றத்திற்கு நல்லவை செய்தலினும் பகைவரைப் பொருந்தி நட்பாகக் கொள்ளுதலை விரைந்து செய்யவேண்டும். இஃது அரசர்க்கும் ஒக்கக் கொள்ளவேண்டு மாயினும் அமைச்சர்தம் தொழிலாக ஈண்டுக் கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொடல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல். (அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒட்டாரை ஒட்டிக் கொளல்-வினைதொடங்குமுன் தன் பகைவரொடு பொருந்தாதவரைத் தனக்கு நட்பாக்கிக்கொள்ளுதல்; நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே-தன் நண்பருக்கு இனியன செய்தலினும் விரைந்து செய்யப்பட வேண்டியதே. உண்மையானவரும் பழகியவருமான நண்பர் தன்னை விட்டு நீங்காராதலானும், அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்பைச் சற்றுக்காலந்தாழ்த்துச் செய்யினும் பொறுத்திருப்ப ராதலானும், பகைவருடன் பொருந்தாதவரை உடனே தன்னொடு சேர்த்துத் கொள்ளாவிடின் பகைவர் அவர் விரும்பியதைக் கொடுத்துத் தம்வயப்படுத்திக் கொள்வ ராதலானும், 'நட்டார்க்கு நட்ட செயலின் விரைந்ததே' என்றார். இனி, இதுவரை தன்னொடு ஒட்டாரை ஒட்டிக்கொளல் எனினுமாம். ஏகாரம் தேற்றம். இக்குறளிரண்டும் மெலியன் செயல் கூறின.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தொழில் செய்பவன் தன் நண்பர்களுக்கு இனியன செய்வதைக் காட்டிலும் விரைவாகச் செய்ய வேண்டியது என்னவென்றால், தன் பகைவரோடு பவைவராக இருப்பவர்களைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாடியவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அதைவிட விரைந்து இணக்கமற்றவரை இணங்கச் செய்ய வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


Than kindly acts to friends more urgent thing to do,
Is making foes to cling as friends attached to you.

ThirukKural English Meaning - Couplet -Translation:


One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.

ThiruKural Transliteration:


nattaarkku nalla seyalin viraindhadhae
ottaarai ottik koLal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore