திருக்குறள் - 452     அதிகாரம்: 
| Adhikaram: sitrinanjeraamai

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

குறள் 452 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nilaththiyalpaal neerdhirinh thatraakum maandharkku" Thirukkural 452 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம். (எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நீர் நிலத்து இயல்பான் திரிந்து அற்று ஆகும் - நீரானது தான் சேர்ந்த நிலத்தின் வகையினால் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையதாம்; மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பு அது ஆகும் - அதுபோல, மாந்தரது அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் வகையால் தன் தன்மை வேறுபட்டு அவ்வினத்தின் தன்மையதாம். இனி, மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும், என ஒரே தொடராக்கினும் அமையும். இப்பொருள்கோட்கு, 'அறிவு' எழுவாய்; 'அற்றாகும்' பயனிலை. இரண்டாம் 'ஆகும்' பெயரெச்சம் . அணி உவமை. இரு தொடராக அல்லது சொல்லியமாக (வாக்கியமாக)க் கொள்ளின் எடுத்துக்காட்டுவமை. மழைபெய்யுமுன் வானத்தின் கண் நின்றநிலையில் தன்னியல்பிலிருந்த நீர் , நிலத்தொடு சேர்ந்த விடத்துத்தன் நிறமும் சுவையும் மணமும் ஆற்றலும் நிலத்திற் கேற்ப வேறுபட்டாற்போல், மாந்தன் அறிவும் அவன் தனித்து நின்றவழித் தன்னியல்பிலிருத்து, ஓர் இனத்தொடு கூடியவழி அவ்வினத்திற்கேற்ப நோக்குந் தன்மையும் வேறுபடும் என்பதாம். அன்னது -அற்று (அன் +து); "மலரோடு (பூவோடு) சேர்ந்த நாரும் மணம்பெறும்" என்பது நல்லினத்தோடு சேர்வதன் விளைவையும். "பன்றியொடு சேர்ந்த கன்றும் பவ்வீதின்னும்" என்பது தீயினத்தோடு சேர்வதன் விளைவையும், நுவலாது நுவலுதல் காண்க. நுவலுதல் நுணித்துச் சொல்லுதல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நீரானது, தான் சேர்ந்த நிலத்தினாலே மாறுபட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல, மனிதர்க்கு அறிவானது தாம் சேர்ந்த இனத்தினாலே வேறுபட்டு அந்த இனத்தின் தன்மையதாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நிலத்தின் இயல்பால் நீரானது தனது தன்மையில் இருந்து திரிந்துவிடும் அதுபோல் மனிதர்களுக்கும் தனது இனத்தின் இயல்பே அறிவு என்று அமைகிறது.

Thirukkural in English - English Couplet:


The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

ThiruKural Transliteration:


nilaththiyalpaal neerdhirinh thatraakum maandharkku
inaththiyalpa thaakum aRivu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore