திருக்குறள் - 407     அதிகாரம்: 
| Adhikaram: kallaamai 2

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

குறள் 407 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nunmaan nuzhaipulam illaan ezhilnhalam" Thirukkural 407 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண், மாண் புனை பாவை அற்று - சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும். (அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணிதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களையும் நுணுகிக் கற்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்; மண் மாண் புனை பாவை அற்று - சுண்ணச் சாந்தினால் மாட்சிமைப்படப் புனைந்தமைத்த படிமையின் எழுச்சியும் அழகும் போலும். நுண்மாண் நுழைபுலத்தின் தன்மையாவது, அறிதற்கரிய நிரடான பொருளையறிதலும் சிக்கலான செய்தியை விரைந்து விடுவித்தலுமாம். 'பாவை' ஆகு பொருளது. எண்பேரெச்சமின்றிப் பிறப்பது. போன்றே உருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலுமரிது (சீவக.முத்தி, 154). ஆயினும், கல்வியறிவில்லாதவழி அதனாற் சிறப்பில்லை யென்பதாம். "ஆடையில்லாதவன் அரை மாந்தன், கல்வியில்லாதவன் கால்மாந்தன்", என்பது ஒரு சொலல்லடை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நுட்பமுடன் ஆராயும் ஆற்றல் இல்லாதவர்களின் அழகு மண்ணால் செய்யப்படும் பொம்மை போன்றது.

Thirukkural in English - English Couplet:


Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

ThiruKural Transliteration:


nuNmaaN nuzhaipulam illaan ezhilnhalam
maNmaaN punaipaavai yatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore