திருக்குறள் - 714     அதிகாரம்: 
| Adhikaram: avaiyaridhal

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

குறள் 714 - திருவள்ளுவர் - ThiruValluvar

"oliyaarmun olliya raadhal veliyaarmun" Thirukkural 714 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க. ('ஒள்ளியார்' என்றது மிக்¢காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல்-அறிவால் விளங்குவார்முன் தரமும் அறிவுச்சுடராக விளங்குக; வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்-அறிவில்லாத வெள்ளைகள்முன் வெள்ளையான சுண்ணச்சாந்தின் நிறத்தைக் கொள்க. 'ஒளியார்' என்றது சொற்பொழியும் அறிஞரின் மிக்காரையும் ஒத்தாரையும். 'ஒளியார்' ஒள்ளியார் என்பதன் தொகுத்தல்.இனி, அகவொளியாகிய அறிவுடையார் எனினுமாம். ஒள்ளியராதல் மதிநுட்பமும் நூற்கல்வியும் உலகியலறிவும் சொல்வன்மையுந் தோன்ற விளக்கியுரைத்தல். 'வெளியார்' வெள்ளியார் என்பதன் தொகுத்தல். அறிவில்லாதவரை வெளியார் என்றது, வயிரமில்லாத மரத்தை வெள்ளையென்றும் வெளிறென்றும் சொல்லும் வழக்குப்பற்றி. அறிஞருக்கு அறிவு விளங்கித் தோன்றுவதுபோல் அறிவிலிகட்கு அறியாமையே விளங்கித் தோன்றுமாதலின், 'வான்சுதை வண்ணங் கொளல்' என்றார். அறியாமையின் இழிவுபற்றிக் கருத்துப் பொருள் வெண்மையைக் காட்சிப்பொருள் வெண்மையோ டிணைத்துக் கூறினார். அறிவிலிகட்கு அறிவிலியாகுக என்பது, சிறுபிள்ளை கட்குச் சிறுபிள்ளையாகுக என்பது போன்றதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவுடையார் முன்பு அறிவுடையாராக இருப்பதற்குக் காரணம், அறிவற்றோர் சுட்டசுண்ணாம்பைப் போல் மாசற்றுப் போவதே.

Thirukkural in English - English Couplet:


Before the bright ones shine as doth the light!
Before the dull ones be as purest stucco white!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

ThiruKural Transliteration:


oLiyaarmun oLLiya raadhal veLiyaarmun
vaansudhai vaNNam koLal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore