திருக்குறள் - 886     அதிகாரம்: 
| Adhikaram: utpakai

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

குறள் 886 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ondraamai ondriyaar katpatin egngnaandrum" Thirukkural 886 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது. இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்றியார் கண் ஒன்றாமைபடின் - தனக்கு உள்ளானவரிடத்திலேயே பகைமை தோன்றுமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - ஒருவனுக்கு இறவாமை கூடுதல் எக்காலத்திலும் அரிதாம். அரசனாயின் பொருள் படை நாடு நட்பு முதலியவற்றாலும், பிறனாயின் பொருள் சுற்றம் ஏவல் முதலியவற்றாலும், பெரியவனான காலத்தும் என்பார் ' எஞ்ஞான்றும் ' என்றார். ' ஒன்றாமை யொன்றியார் ' உள்முரண் (Oxymoron) இந் நான்கு குறளாலும் உட்பகையால் தனிப்பட்டவனுக்கும் ஒரு குடும்பத்தலைவனுக்கும் அரசனுக்கும் வருந்தீங்கு கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தனி வேறு சிந்தை உள்ளவர்கள் கூடி இருக்க அடுத்தவரின் சதியால் பிரிந்தால் எக்காலத்திலும் சிறப்புற கூடி இருப்பது அரிது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.

Thirukkural in English - English Couplet:


If discord finds a place midst those who dwelt at one before,
'Tis ever hard to keep destruction from the door.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.

ThiruKural Transliteration:


ondraamai ondriyaar katpatin eGnGnaandrum
pondraamai ondral aridhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore