திருக்குறள் - 1237     அதிகாரம்: 
| Adhikaram: uruppunalanazhidhal

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.

குறள் 1237 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paadu perudhiyo nenje kotiyaarkken" Thirukkural 1237 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?. இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை. ('கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'? என்றாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அவ்வியற்பழிப்புப் பொறாது தன்நெஞ்சிற்குச் சொல்லியது.] நெஞ்சே- என் உள்ளமே!; கொடியார்க்கு என்வாடு தோள் பூசல் உரைத்து- இவள் கொடியா ரென்கிறவரிடம் நீ சென்று என் மெலிகின்ற தோள்களினால் ஏற்படும் ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ- ஒரு மேம்பாடு பெறுவாயோ? பெறின் அதைப் போற் சிறந்ததொன்றில்லை. 'பாடுபெறுதியோ' என்னும் ஆர்வ வினா பெறுதல் கூடாமையை யுணர்த்தி நின்றது. 'கொடியார்' என்றது இங்கு எதிர்மறைக் குறிப்பு. 'வாடுதோள்' என்பது அவை தாமே வாடுகின்றன என்பது தோன்ற நின்றது. 'பூசல்' என்றது தோழி இயற்பழித்தலும் தலைமகள் அதை மறுத்துரைத்தலும் முதலியவற்றை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெருமைக் கொள்ள மாட்டாய என் நெஞ்சே கொடியவரின் கொடிமையால் வாடும் தோள் கண்டு எழுந்த பூசலை உரைத்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ!

Thirukkural in English - English Couplet:


My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?.

ThiruKural Transliteration:


paadu perudhiyo nenje kotiyaarkken
vaatudhot poosal uraiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore