திருக்குறள் - 874     அதிகாரம்: 

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

குறள் 874 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pakainhatpaak kontozhukum panpudai yaalan" Thirukkural 874 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரை நட்புபோலக் கொண்டொழுகவல்ல பண்புடையவன் பெருமையின்கீழே உலகம் தங்கும். இது பகை கொள்ளாமையால் வரும் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்துகொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது பெருமையுள்ளே; தங்கிற்று உலகு - அடங்கிற்று இவ்வுலகு. (வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது. வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல். ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள், படை என இருவகைத்தாய ஆற்றல். அதன் வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின், அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன் தகைமைக்கண்-இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு அமைதியுடன் ஒழுகும் பண்பாடுள்ள அரசனது பெருமையின் கீழ்; உலகு தங்கிற்று-இவ்வுலகம் அடங்கி நிற்கும். பொருட்கேற்ப ’இயலுமாயின்’ என்பது வருவிக்கப்பட்டது. ’வேண்டிய வழி’ என்னுஞ் சொல்லை வருவித்தார் பரிமேலழகர். அது ’பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல்.' (குறள்.830) என்பதிற் கூறியவாறு கூடாநட்பொடு கூடிவாழும் வலக்கார நிலைமைக்கு ஏற்குமேயன்றி, பகையை நிலையான உண்மை நட்பாக மாற்றியொழுகும் பண்பாட்டு நிலைமைக்கு ஏற்காதென அறிக.பெருமை என்றது பொருள் படை பண்பாடு முதலியவற்றால் ஏற்பட்ட தலைமை. பகையும் நட்பாக மாறியபின் உலக முழுவதும் வயப்பட்டிருக்குமாதலின் 'தகைமைக்கட் டங்கிற் றுலகு' என்றார்.தேற்றமும் நிலைபேறும் பற்றித் 'தங்கிற்று' என இறந்தகாலத்தாற் கூறினார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரையும் நட்பாக கொண்டு பழகும் பண்புடையாளரின் மதிப்பு மிகுந்த செயலால் உலகம் நிலைக்கிறது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தான் வேண்டும் போது, தன் பகைவருள் சிலரைப் பிரித்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித்திறனுடைய அரசனது பெருமையினுள்ளே, இவ்வுலகமே அடைங்கிவிடும்.

Thirukkural in English - English Couplet:


The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.

ThiruKural Transliteration:


pakainhatpaak koNtozhukum paNpudai yaaLan
thakaimaikkaN thangitru ulaku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore