திருக்குறள் - 700     அதிகாரம்: 

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

குறள் 700 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pazhaiyam enakkarudhip panpalla seyyum" Thirukkural 700 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும். (அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை-அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் என்று கருதித் தமக்குத் தகாதவற்றைச் செய்யும் தவறான நட்புரிமை; கேடுதரும்-அமைச்சர் முதலியோர்க்கு அழிவைத்தரும். பழைமையாவது விளையாட்டுத் தோழமையும் கல்வித் தோழமையும். அரசப் பதவியேற்ற பின்பும் பழைய தோழமைபற்றிச் சமநிலை கொண்டாடிக் குற்றஞ் செய்யின், அரசர்பொறாது தண்டிப்பராதலின், 'கெழுதகைமை கேடுதரும்' என்றார். இம்முக்குறளாலும், இளமையும் நெருங்கிய தொடர்பும் பற்றி அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெடுங்கால நெருக்கம் என்று பண்பற்றதை செய்யும் உரிமை கொண்டாடுவது கேடு உண்டாக்கும்.

Thirukkural in English - English Couplet:


Who think 'We're ancient friends' and do unseemly things;
To these familiarity sure ruin brings.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.

ThiruKural Transliteration:


pazhaiyam enakkarudhip paNpalla seyyum
kezhudhakaimai kaedu tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore