திருக்குறள் - 54     அதிகாரம்: 

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

குறள் 54 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pennin perundhakka yaavula" Thirukkural 54 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்ணின் பெருந்தக்க யா உள ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? ; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் -அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின். கற்பு என்பது கற்போல் உறுதியான இருபாலிடைக் காதற் பண்பு. கல் -கற்பு. "கற்பு றுத்திய கற்புடை யாடனை" என்று கம்பரும் (அயோத்தி. நகர்நீங்கு. 19) கூறுதல் காண்க. அது மணப்பருவம் வரை தோன்றாதிருந்து பின்பு ஒருவரையே காதலிப்பது; இருபாற்கும் பொதுவானது. ஆதலின், மனைவியையன்றி அணங்கையும் நோக்காத ஆண்கற்பும் கணவனையன்றிக் காவலனையும் நோக்காத பெண்கற்பும் எனக்கற்பு இருதிறப்பட்டதாம். இங்குக் கூறியது பெண்கற்பு என அறிக. இன்னும் இதன் விளக்கத்தைக் கற்பியலிற் காண்க. கற்புடை மனைவியால் அறம்பொருளின்பப் பேற்றுடன் வாழ் நாளும் நீடிப்பதால், பெண்ணிற் பெருந்ததக்க யாவுள? என்றார். உண்டாகப் பெறின் என்பது உண்டாதலின் அருமை குறித்து நின்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பு என்னும் கலங்காமையாகிய மனத்திண்மை இருந்துவிட்டால் பெண்மைவிட உயர்வான (மேம்பட்ட) பொருள்கள் யாவை உள?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்ணை விட பெறவேண்டிய ஒன்று எதுவும் இல்லை ,கற்பென்னும் திடத்தன்மை உண்டாக்க பெற்றால் .

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை.

Thirukkural in English - English Couplet:


If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

ThiruKural Transliteration:


peNNin perundhakka yaavula kaRpennum
thiNmaiuN daagap peRin.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore