திருக்குறள் - 1311     அதிகாரம்: 
| Adhikaram: pulavi nunukkam

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

குறள் 1311 - திருவள்ளுவர் - ThiruValluvar

"penniyalaar ellaarum kannin podhu unpar" Thirukkural 1311 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அது , ' புலவியது ' நுணுக்கம் என விரியும் .அஃதாவது , தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற் காரண மில்லையாகவும் , காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக உட்கொண்டு , அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம் காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.] (உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(உலாப் போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொது வுண்பர் - பெண்தன்மையுடையவரெல்லாரும் தம் கண்ணாற்பொதுவாக நுகர்வர்; நின்மார்பு நண்ணேன் - ஆதலால், அவர் நுகர்ந்த எச்சிலாகிய உன் மார்பைப் பொருந்தேன். முடிசூட்டு நாளன்றும் வெற்றிவிழா நாளன்றும் அரசன் தேரேறித் தன் தலைநகரத் தேர் மறுகுகளில் உலாவரும்போது, பேதை முதலிய எழுவகைப்பருவமகளிரும் அவன்மீது காதல் கொள்வதாகப் பாடுவது உலா எனும் பனுவல். "ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப, " (தொல். 1013) பரத்தையர் கற்பு நிறை நாண் முதலிய நற்குணங்களின்றிப் பெண்வடிவு மட்டுங் கொண்டவர் என்னுங் கருத்தாற் ' பெண்ணியலார் என்றாள். பொதுவுண்டல் ஒருங்கு நோக்குதல். இதனாற் பரத்தமை புலவிநுணுக்கத்தில் தலைமகன்மேல் ஏற்றிக் கூறப்படுவதல்லது, உண்மையாக நிகழ்வதன்றென்றும், திருவள்ளுர் கூறும் இன்பத்துப்பாலிற்குரியதன் றென்றும் அறிந்துகொள்க.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பெண்தன்மைக் கொண்ட எல்லோரும் கண்களால் பொதுப் பொருள் போல் கண்டதால் நாட மாட்டேன் பரந்த உனது மார்பை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பரத்தனே! பெண் தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள்.

Thirukkural in English - English Couplet:


From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace.

ThirukKural English Meaning - Couplet -Translation:


You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.

ThiruKural Transliteration:


penniyalaar ellaarum kannin podhu-unpar
nannen paraththa-nin maarpu.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore