திருக்குறள் - 505     அதிகாரம்: 
| Adhikaram: therindhudhelidhal

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

குறள் 505 - திருவள்ளுவர் - ThiruValluvar

"perumaikkum enaich chirumaikkum thaththam" Thirukkural 505 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம். இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை. (இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - மக்கள் அறிவாற்றல் குணங் கல்வி பொருள் ஆகியவற்றால் அடையும் மேன்மைக்கும் மற்றக் கீழ்மைக்கும் உரைகல்லாயிருப்பது ; தம்தம் கருமமே - அவரவர் செய்யும் வினையே யன்றி வேறொன்று மன்று. கையூட்டினாலும் இனவுணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும் , உண்மையான உயர்விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே என்பது ஆசிரியர் கருத்து . ஆகவே , வினைத்திறமையுள்ளவனையே வினைக்கமர்த்துக என்பதாம் . "பெருமையுஞ் சிறுமையுந் தான்றர வருமே," என்னும் அதி வீரராம பாண்டியன் கூற்று இக்குறட் சுருக்கமாகும். கருமத்தைக் கட்டளைக் கல்லாக உருவகித்துப் பெருமை சிறுமைகளை மாழை (உலோக) வகைகளாக உருவகியாது விட்டது ஒருமருங்குருவகம் . ஏகாரம் தேற்றம் , ஒருவனுக்கு அறிவாற்றல் மிக்கிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் வினைத்திறமின்றேல் அவற்றாற் பயனில்லை யென்பதாம் . பரிமேலழகர் பெருமை சிறுமைக்குக் கரணியமாகப் பிறப்பையுங் குறித்துள்ளார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுடைய பெருமைக்கும் மற்றைய சிறுமைக்கும் உரைகல்லாக இருப்பது அவனவன் செய்கின்ற செயல்களேயாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மதிக்கப்படுவதற்கும் மற்றபடிச் சிறுமை படுவதற்கும் அவரவர் செயல்களே அவரவர்களை வழி நடத்தும் கட்டளைக் கல். (கட்டளைக் கல் என்பது மன்னர்கள் மக்களுக்கு வழங்கும் கட்டளைகள் பொறிக்கப்பட்டு இருப்பது)

Thirukkural in English - English Couplet:


Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A man's deeds are the touchstone of his greatness and littleness.

ThiruKural Transliteration:


perumaikkum Enaich chiRumaikkum thaththam
karumamae kattaLaik kal.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore