திருக்குறள் - 59     அதிகாரம்: 

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

குறள் 59 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pukazhpurindha illiloarkku illai" Thirukkural 59 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


புகழ் பரிந்த இல் இல்லோர்க்கு - தனக்கும் தன் கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவியில்லாதார்க்கு; இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை இல்லை-தம்மைப் பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடையில்லை. பரிந்த என்னும் பெயரெச்சத்தின் அகரம் தொக்கது. ஏறு என்னும் விலங்கின ஆண்பாற் பொதுப் பெயர் நடைச் சிறப்புப்பற்றி இங்கு அரிமாவின் ( சிங்கத்தின் ) ஆண்பாலைக் குறித்தது. கற்புடை மனைவியாற் கணவன் மதிக்கப்படுதலை, "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறம். 3 : 6 ), "அறம்பா டிற்றே ஆயிழை கணவ" (புறம். 34 : 7 ) "சேணுறு நல்லிசைச் சேயிழை கணவ" (பதிற். 88 : 36) என்னும் விளிகள் உணர்த்துதல் காண்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


புகழ்வதற்குரிய மனையாளைப் பெறாத இல்வாழ்வார்களுக்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போன்ற பெருமிதமான நடை இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


புகழ் அடைந்த குடும்ப வழக்கை வழாதவருக்கு இல்லை இகழ்ந்து பேசுவார் முன் காளை போன்ற கம்பிர நடை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை

Thirukkural in English - English Couplet:


Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

ThiruKural Transliteration:


pukazhpurindha illiloarkku illai ikazhvaarmun
ERupoal peedu nadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore