திருக்குறள் - 1324     அதிகாரம்: 
| Adhikaram: ootaluvakai

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

குறள் 1324 - திருவள்ளுவர் - ThiruValluvar

"pulli vidaaap pulaviyul thondrumen" Thirukkural 1324 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும். அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அப்புலவி இனி எதனால் நீங்குமென்ற தோழிக்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் - காதலரைத் தழுவிக் கொண்டு பின் விடாமைக் கேதுவாகிய அப்புலவிக் கண்ணே; என் உள்ளம் உடைக்கும் படை - அதை மேற்கொண்ட என் உள்ளத்தைத் தகர்க்கும் படைக்கலம்; தோன்றும் - உண்டாகும். புலவி யென்றது அவ்வினை நிகழ்ச்சியை, படைக்கலம் என்றது காதலரின் பணிமொழியை, புலவி நீங்குந் திறங் கூறியவாறு. விடா அ, இசைநிறை யளபெடை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இணைவதால் இணைவதையே விருப்புச் செய்கிறது உள்ளம், இணைவதே என் உள்ளத்தை உடைக்கும் படையாக இருக்கிறது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது.

Thirukkural in English - English Couplet:


'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.

ThirukKural English Meaning - Couplet -Translation:


In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.

ThiruKural Transliteration:


pulli vidaaap pulaviyul thondrumen
ullam udaikkum padai.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore