திருக்குறள் - 1245     அதிகாரம்: 
| Adhikaram: nenjotukilaththal

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

குறள் 1245 - திருவள்ளுவர் - ThiruValluvar

"setraar enakkai vidtalundo nenjaeyaam" Thirukkural 1245 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை. (உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) (இ-ரை.) நெஞ்சே - என் உள்ளமே ! ; யாம் உற்றால் உறாதவர் - யாம் அவர்பால் அன்புகொண்டாலும் தாம் எம்பால் அன்பு கொள்ளாத நம் காதலரை ; செற்றார் எனக் கைவிடல் உண்டோ - வெறுத்தாரென்று நாம் அவரை விட்டு விலகுதல் நமக்குத் தகுமோ ? தகாதே ! உறுதல் அன்பாற் பொருந்துதல் . அவர்பாற் செல்லுவதே நமக்குத் தகும் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்து சென்றாலும் என்னை கைவிடல் உண்டோ நெஞ்சே உறவுகொண்டு இன்று உறவு இல்லாதவர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ?

Thirukkural in English - English Couplet:


O heart, as a foe, can I abandon utterly
Him who, though I long for him, longs not for me?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?.

ThiruKural Transliteration:


setraar enakkai vidtalundo nenjaeyaam
utraal uraaa thavar.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore