திருக்குறள் - 267     அதிகாரம்: 
| Adhikaram: thavam

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

குறள் 267 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sudachchudarum ponpoal olivitum thunpanhj" Thirukkural 267 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும். இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சுடச் சுடரும் பொன்போல்-உருக்கப்படும் பொன் தீத் தன்னைச் சுடச்சுடத் தன் மாசு மறு நீங்கி ஒளி மிகுவது போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளிவிடும் - தவஞ் செய்ய வல்லவர்க்குஅதனால் வருந்துன்பம் தம்மை வருத்த வருத்தத் தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும். தவம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் இக் குறளிலுள்ள உவமம் பொருளிரண்டிலும் விளக்கமாயிற்று. 'கில்' ஆற்ற லுணர்த்தும் இடைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காய்ச்சுவதால் பளபளக்கும் தங்கத்தைப் போலவே ஒளி பரவும் துன்பம் வர வர தவப் பார்வை அகலாதவர்க்கு.

Thirukkural in English - English Couplet:


The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).

ThiruKural Transliteration:


sudachchudarum ponpoal oLivitum thunpanhj
sudachsudaa noaRkiR pavarkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore