திருக்குறள் - 1065     அதிகாரம்: 
| Adhikaram: iravachcham

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

குறள் 1065 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thenneer adupurkai aayinum thaaldhandhadhu" Thirukkural 1065 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. (தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தெள்நீர் அடு புற்கை யாயினும் -தெளிந்த நீர் போல் தெடுதெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழாயினும் ;தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியதுஇல் -தன் உழைப்பினால் வந்த வுணவை உண்ணுவதிலும் மிக இனியது ஒன்றுமில்லை, நொந்து சுமந்து பெற்ற பிள்ளை காக்கைக் குஞ்சுபோற் கருத்திருப்பினும், தாய்க்குத் தன்பிள்ளை நன்பிள்ளையாதல்போல, உழைப்பாளிக்குத்தான் வருந்தியுழைத்த வுழைப்பால் வந்த வுணவு, கேழ்வரகு மாவினாற் காய்ச்சிய தெண்கூழாயினும் தேவரமுதாம். உம்மை இழிவு சிறப்பு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வெறும் தண்ணிர் போல் காய்ச்சிய கூழாக இருப்பினும் உழைத்து உண்ணும் பொழுது அதனிலும் மிகுதியானது இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப் போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும், அதனை உண்பதை விட இனியது வேறு யாதும் இல்லை.

Thirukkural in English - English Couplet:


Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tasteless as the water clear.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.

ThiruKural Transliteration:


theNNeer adupuRkai aayinum thaaLdhandhadhu
uNNalin oonginiya thil.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore