திருக்குறள் - 737     அதிகாரம்: 
| Adhikaram: naatu

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

குறள் 737 - திருவள்ளுவர் - ThiruValluvar

"undesirupunalum vaaindha malaiyum varupunalum" Thirukkural 737 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மேல்நீர் கீழ்நீர் நிறுத்தலாமிடத்தினைக் கிணறுகல்லி நீருண்டாக்குமிடத்தினையும், பயன்படு மலையினையும், ஆறொழுகுமிடத்தினையும், வலிய அரணாகும் இடத்தினையும் கண்டு அவ்விடத்தை நாடாக்குக: அவை நாட்டிற்கு உறுப்பாதலால். இஃது இவை ஐந்துங்குறையாமல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம். (ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருபுனலும் -மேல்நீர் கீழ்நீர் எனப்பட்ட இருவகை நீர்வளமும்; வாய்ந்த மலையும் - பலவகையிலும் பயன்படுவதற்கேற்றதாய் வாய்ந்த மலையும் வருபுனலும் - அதனின்று வரும் ஆறும்வல் அரணும் - இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை வலிய அரணும்; நாட்டிற்கு உறுப்பு - சிறந்த நாட்டிற்குரிய உறுப்புக்களாம். நிலத்தின் மேலுள்ள ஆற்று நீரும் குளத்து (ஏரி) நீரும் மேல்நீர்; நிலத்தின் கீழுள்ள கிணற்று நீரும் துரவு நீரும் கீழ்நீர். துரவு பெருங்கிணறு. நாட்டிற்கு எல்லையாகவும் அரணாகவும் வளநிலையமாகவும் உதவும் மலையை 'வாய்ந்த மலை' என்றார். "அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே."

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்று நீரும், ஊற்று நீரும். அதை வாய்க்க செய்யும் மலையும், பருவத்தே வரும் மழை நீரும், வல்லமையான அரணும் நாட்டின் அவசியமான உறுப்புகள்.

Thirukkural in English - English Couplet:


Waters from rains and springs, a mountain near, and waters thence;
These make a land, with fortress' sure defence.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.

ThiruKural Transliteration:


irupunalum vaaindha malaiyum varupunalum
vallaraNum naattiRku uRuppu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore