திருக்குறள் - 1200     அதிகாரம்: 
| Adhikaram: thanippatarmikudhi

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

குறள் 1200 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uraaarkku urunoi uraippaai katalaich" Thirukkural 1200 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று. இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. (உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(தலைமகன் தூதுவரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சொடு சொல்லியது.) உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு-உன்னோடு உறவுகொள்ளாதார்க்கு நீ உற்ற நோயைச் சொல்லக்கருதும் நெஞ்சே!; கடலைச்செறாய்-அவ்வருஞ் செயலை விட்டுவிட்டு உனக்குத் துயர் விளைக்குங்கடலைத் தூர்க்க முயல்வாயாக. அது உனக்கு எளிது; வாழிய- நீ நீடுவாழ்க! நீ சொல்லக் கருதிய செய்தி நீள்பெரு நோயாதலானும், அதைக்கேட்பார் உறவிலராதலானும் உன்தூது செயற்கரியதும் பயனில் முயற்சியுமாகும். ஆதலால், அதை விட்டுவிட்டுப் பயனுள்ள வேறுவினை ஏதேனும் மேற்கொள்க என்பதாம். நீடுவாழும் நிலைமையில்லாததாகக் கருதி 'வாழிய' என வாழ்த்தினாள். 'உறாஅர்' 'செறாஅஅய்' இசைநிறை யளபெடைகள். ஆசிரியர் வாழ்நாள் முழுதும் பிரியாத ஒரு மனைவி வாழ்க்கையையே இங்கெடுத்துக் கூறுவதாலும், கற்பியலை ஊடலுவகையில் முடிப்பதாலும், இவ்வதிகாரத்திற் கணவனை அன்பிலியாகக் கூறியிருப்பதெல்லாம், பெண்பாவின் மென்மையும் மடமையும் பற்றிய உயர்வுநவிற்சியே என அறிந்துகொள்க.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உறவை நாடாதவர்க்கு தான் உற்ற நோயை உரைப்பாய் கடலைத் தூர்பதற்கு முயல்வதைப்போல் என் நெஞ்சே நீ வாழ்க.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! நின்னிடம் அன்பற்றவருக்கு நின் நோயைச் சென்று சொல்லுகிறாயே; அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக.

Thirukkural in English - English Couplet:


Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).

ThiruKural Transliteration:


uraaarkku urunoi uraippaai katalaich
cheraaaai vaazhiya nenju.

திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore